Saturday, April 27, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு: இருவர் கைது

வவுனியாவில் விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு: இருவர் கைது

வவுனியா – காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வன திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து நெடுங்கேணி பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நேற்று முன்தினம் (03.11.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1977ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை வவுனியா – காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியமர்த்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்கள் வழங்கப்பட்டன.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 84 குடும்பங்கள் இந்தியா உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா – காஞ்சிரமோட்டை பிரதேசத்தில் 84 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர்.

ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால், பல குடும்பங்கள் இப்பகுதியை விட்டு வெளியேறி, தற்போது 15 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வீடுகளை ஒட்டிய நிலத்தில் தோட்டம் மற்றும் நெல் சாகுபடியை மேற்கொள்வதற்காக பொது மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக நிலத்தை உழுது வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு சென்ற வனவளத் திணைக்களம், வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணி எனவும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபடத் தடை விதித்ததோடு, உழவு மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர்கள் மீது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

எனினும் முறைப்பாட்டையடுத்து வவுனியா – காஞ்சிரமோட்டை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வனத்துறையினர் தங்கள் வீட்டு நிலங்களில் ஒரு நெற்பயிர் கூட பயிரிட அனுமதிக்கவில்லை என்றும், இது குறித்து அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மவுனம் சாதித்து வருவதாகவும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments