Saturday, April 27, 2024
Homeசினிமாகோவா திரைப்பட விழா … மெக்சிகோ திரைப்பட விழாவில் பங்கேற்ற ARR…

கோவா திரைப்பட விழா … மெக்சிகோ திரைப்பட விழாவில் பங்கேற்ற ARR…

பனாஜி: கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவின் துவக்கத்தில் ஸ்பானிஷ் திரை நட்சத்திரம் கார்லஸ் சவுராவுக்கு ‘சத்யஜித் ரே வாழ்நாள் திரைப்பட விருது’ வழங்கப்பட்டது.
கோவா சர்வதேச திரைப்பட விழா
கோவா தலைநகர் பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தீபிகா படுகோன், தமன்னா, மாதவன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படும் இந்த விழாவின் முதல் நாளில், ஸ்பானிஷ் நடிகரான கார்லஸ் சவுராவுக்கு ‘சத்யஜித் ரே வாழ்நாள் விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரது சார்பில் மகள் அன்னா சவுரா விருதைப் பெற்றுக்கொண்டார்.
மெக்சிகோ சினிமா விருந்து
முக்கியமாக இந்த விழாவில் ‘Future of Content with’ என்ற தலைப்பில் ஏஆர் ரஹ்மான், சேகர் கபூர், ரொனால்ட் மென்சல், பிரணவ் மிஸ்திரி ஆகியோர் கலந்துரையாடினர். அதில் திரைத்துறையில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஐஎப்எப்ஐ பிரதிநிதிகளை மகிழ்விக்கும் வகையில் மெக்சிக்கோ சினிமா விருந்தும் இந்த விழாவில் அரங்கேறியது. இதுகுறித்து காணொலி மூலம் பேசிய மெக்சிகோ சுற்றுலாத்துறை அமைச்சர் மிகுவல் டோருகோ மார்க்யூஸ், “கோவாவில் நடைபெறும் வியத்தகு இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் மிக முக்கியமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். மெக்ஸிகோ தனித்துவமான கலாச்சாரம் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த பாரம்பரியத்தின் மிக முக்கியமான பகுதி சினிமா” எனக் கூறினார்.
சர்வதேச அளவில் விருதுகள்
மேலும், “ஜாம்பவான்களாகக் கருதப்படும் சிறந்த இயக்குநர்கள், நடிகர்களைக் கொண்ட எங்கள் நாட்டின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. மெக்சிகன் சினிமா நாட்டின் சமூக, கலாச்சார சூழலின் வெளிப்பாடாக பிறந்தது என விவரித்தார். அதேபோல், தனது தாயார் மரியா எலினா மார்க்யூஸ், தந்தை மிகுவல் டோருகோ ஆகியோர் மெக்சிகன் சினிமாவின் பொற்கால நடிகர்கள்” என்றும் அவர் பெருமையாக தெரிவித்தார். அதேபோல், மக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை நீக்குவதற்கும் நாடுகளுக்கு இடையில் பாலங்களை அமைப்பதற்கும் திரைப்படங்களே சிறந்த வழி எனக் கூறினார். மெக்ஸிகோ தற்போது சர்வதேச திரைப்படத் துறையில் அற்புதமான படைப்பாற்றல், தயாரிப்பு திறனைக் கொண்டுள்ளது, இது சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இந்த தனித்துவமான விழாவில் மெக்சிகன் திரைப்படங்கள் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறோம் என பேசியிருந்தார்.
கவனம் ஈர்த்த ரெட் ஷூஸ்
2022 ஆம் ஆண்டு வெளியான மெக்சிகன் திரைப்படமான ரெட் ஷூஸ் சர்வதேச போட்டிப் பிரிவில் 14 படங்களுடன் போட்டியிடுகிறது. அதில் வெற்றி பெறுபவருக்கு கோல்டன் பீகாக் வழங்கப்படும். கார்லோஸ் எய்ச்சல்மான் கைசர் இயக்கிய ரெட் ஷூஸ், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழும் ஒரு விவசாயியைப் பற்றிய திரைப்படமாகும். இது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில். பல பரிந்துரைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக்கான போட்டியில் மெக்சிகோ – அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான ஐலேண்ட் ஆஃப் லாஸ்ட் கேர்ள்ஸ் உள்ளது. இப்படம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும், ஃபேன்டாசியா விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments