சவூதி அரேபியாவின் பெண்உரிமை செயற்பாட்டாளருக்கு சிறை!

2

சவூதி அரேபியாவின் மிக முக்கியமான பெண் உரிமை ஆர்வலர்களில் ஒருவருக்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

லூஜெய்ன் அல்-ஹத்லவுல் எனும் அந்த பெண், பெண்கள் தனியாக கார் ஓட்டுவது உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அவர் ஏற்கனவே விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல தனிமைச் சிறைவாசங்களையும் தாங்கியுள்ளார்.

அவரது தொடர்ச்சியான சிறைவாசம் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜோ பிடனின் உறவுகளில் ஒரு சர்ச்சையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜோ பிடென் பதவியேற்புக்கு முன்பே லூஜெய்ன் அல்-ஹத்லவுல் வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

சவூதி அரசியல் கைதிகளை மையமாகக் கொண்ட “மனசாட்சியின் கைதிகள்” என்ற உரிமைக் குழுவின் கூற்றுப்படி, அல்-ஹத்லவுல் ஏற்கனவே மே 2018 முதல் சிறையில் இருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் 34 மாதங்கள் நீக்கப்பட்டு மார்ச் 2021 இல் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில், அவர் ஐந்து வருடங்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்படுவார் என்றும், விடுதலையான பின்னர் மூன்று ஆண்டுகள் தகுதிகாண் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக, பதவியேற்ற பிறகு அமெரிக்கா – சவூதி உறவை மறுஆய்வு செய்வதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை அதிக அளவில் கவனத்தில் கொள்வதாகவும் பிடென் கூறியுள்ளார்.

சவூதி அரேபியா பெண் செயற்பாட்டாளர்களை குறிவைப்பது உட்பட பேரழிவு தரும் கொள்கைகளைத் தொடர அனுமதி வழங்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கையை மாற்றியமைப்பதாகவும் அவர் உறுதிமொழி எடுத்துள்ளார்.

பிடெனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன், அல்-ஹத்லவுலின் தண்டனையை கடுமையாக விமர்சிர்த்துள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மற்றொரு சவூதி பெண்ணுரிமை ஆர்வலர் மாயா அல்-சஹ்ரானிக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இரு பெண்களுக்கும் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளன.