அரசியல் செல்வாக்கு மிகுந்த நிறுவனங்கள் மற்றும் சிலருக்கு ஒரு புறமாக முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன – பொதுமக்கள் விசனம்

8

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் சட்டங்கள் சாதாரண பொதுமக்களுக்கு ஒருவிதமாகவும் பண பலம் பொருந்திய அல்லது அரசியல் செல்வாக்கு மிகுந்த நிறுவனங்கள் மற்றும் சிலருக்கு ஒரு புறமாக ஒரு வழியாகவும் அமைந்து இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த சம்பவமொன்றை சுட்டிக்காட்டுகிறார்கள்.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்ற நிறுவனத்தின் பணியாளர்கள் சுமார் 100 பேர் வரை கடந்த 20ஆம் திகதி வெளி மாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்திருக்கின்றனர்.

இதற்கு முதல் ஒரு முறையும் இங்கே பணியாற்ற வந்தவர்கள், தனிமைப்படுத்தப்படாமல் பணியாற்றி விட்டு சென்றார்கள். வடக்கு சுகாதாரத்துறை அதை கண்டும்காணாமலும் இருந்து விட்டது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதியும் 100 பேர் வரை தென் பகுதியை சேர்ந்த பல மாவட்டங்களிலிருந்து வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உரிய அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் வழங்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் வந்த பணியாளர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினராலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லையென குறிப்பிட்டு, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருடைய கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு பெரும் இழுபறியின் பின்னர் 23ம் திகதி இரவு முதல் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும் இவ்வாறு பண பலம் பொருந்திய கம்பெனிகள் மற்றும் பண பலம் பொருந்திய அரசியல் செல்வாக்கு மிக்க சிலருக்கு வேறொரு ஒருவிதமாகவும் அதிகாரிகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

எனவே மாவட்ட மக்களின் சுகாதார நன்மைகளை கருத்தில் கொண்டு சட்டங்களை யாவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தி உரிய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் ஊடாக மாவட்ட மக்களை பாதுகாக்குமாறு சுகாதார தரப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.