நிறைவடையும் பிக் பாஸ் நிகழ்ச்சி!

2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஒரு மாதத்தில் முடிவடையவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள்.

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராகவும் அடுத்ததாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேறினார்கள். இதையடுத்து பாடகி சுசித்ரா, மாடல் சம்யுக்தா, நடிகை சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோரும் வெளியேறியுள்ளார்கள்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஆஜித், சோம், ஷிவானி, கேப்ரியலா, ரியோ என 9 பேர் போட்டியில் மீதமிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஒரு மாத்தில் முடிவடையவுள்ளது. இத்தகவலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவித்துள்ளார். இதனால் ஜனவரி 17 அல்லது 24-ல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.