கிளிநொச்சியில் மாடுகளில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை தோல் நோய்!

113

கிளிநொச்சியில் மாடுகளில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை தோல்
நோய் (இலம்பி) பற்றி கால்நடை வைத்திய திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் 1988 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஒரு வகை வைரஸ் நோய் 2019ம் ஆண்டு அயல் நாடான இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்நோய்
காணப்படுகின்றது.

இந் நோய் தாக்கம் உள்ளூர் இன மாடுகளை விட கலப்பின மாடுகளில் அதிகமாகக்
காணப்படுவதுடன் எல்லா வயது மட்டங்களையும் தாக்குகின்ற போதும் கன்றுகளில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இதன் நோய் அரும்புகாலம் 04 -14 நாட்கள்
ஆகும். நோய்த்தாக்கம் 40% ஆகவும் இறப்பு வீதம் 2% ஆகவும் உள்ளமை ஆய்வுகள்
மூலம் அறியப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள்

இந் நோயின் பிரதான அறிகுறிகளாக காய்ச்சல், பசியின்மை, அதிக
உமிழ்நீர் வெளியேறல், சளிவடிதல், கண்கள் சிவத்தல், கண்ணீர் வடிதல், உடல்
தளர்ச்சி அடைதல், எடைகுறைதல், பால் உற்பத்தி குறைதல் ஆகிய ஆரம்ப
அறிகுறிகளுடன் உடலின் பெரும்பாலான பகுதிகளின் தோலில் 2-5cm அளவுடைய கட்டிகள் உருவாகும். அத்துடன் அக அங்கங்களான வாய், மூச்சுக்குழல், குடல், சுவாசப்பை ஆகியவற்றிலும் கட்டிகள் உருவாகலாம்.

கட்டிகள் உடைந்து புண்ணாகுவதுடன் தோலில் உள்ள கட்டிகள் வெடித்து புண்ணாகி
புளுக்கொண்ட புண்களாக மாற்றமடையும். அது மட்டுமன்றி கழுத்துப் பகுதியிலும்,
கால்களிலும் வீக்கம் ஏற்படும். இதனால் மாடுகள் நடக்க கஸ்டப்படும். அத்துடன்
நிணநீர் கணுக்கள் வீங்கி காணப்படும். இந் நோயின் நீண்டகால தாக்கமாக ஆரம்ப
கால சினைப்பசுக்களில் கருச்சிதைவு ஏற்படலாம். அத்துடன் மடி அழற்சி,
மலட்டுத்தன்மை என்பன ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.

நோய் எவ்வாறு பரவுகின்றது?

இந்நோய் நுளம்பு, இலையான், உண்ணிகள் மூலமே அதிகமாகக் கடத்தப்பட்டு தொற்று ஏற்படுகின்றது. எனினும் கால்வாய் நோய் பரவல் போன்று மனிதனாலும்,
வாகனங்களாலும் கடத்தப்படலாம். மேலும் மாடுகளை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் மற்றும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளான மாடுகளின் உமிழ்நீர், சளி, பால், விந்து மூலமும் இந்நோய் பரவலடையலாம்.

இந்நோய் மனிதனில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுடன் ஆடு,
செம்மறி ஆகிய கால்நடைகளிலும் இந் நோய் ஏற்படாது என்பதுடன் மாடுகள், எருமைகள் மட்டுமே இந்நோயினால் பாதிக்கப்படும்.

எனவே மாடுகளில் இவ் அறிகுறிகள் காணப்படும் இடத்து உடனடியாக அருகில் உளள
காலநடை வைத்திய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் தீர்வையும் பெற்றுக்கொளளுமாறு கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களம் அறிவித்துள்ளது.