30 கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் முதலாவது தொகுதியில் அனுமதி!

4

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த 30 கொரோனா நோயாளர்களும் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக்கூடம் இயங்கி இடத்தில், இராணுவத்தின் வைத்தியசாலை இயங்கியது. அது தற்போது, வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, இந்த வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு, நாட்டின் முதன்மையான தொற்றுநோயியல் வைத்தியசாலையாக உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த தொற்று நோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் இன்று (29) முதலாவது தொகுதி கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 40 நோயாளர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்குவதுடன், அங்கிருந்து பிறபகுதிகளிற்கு தண்ணீர் செல்வதால் தொற்று அபாயம் ஏற்படலாமென்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 நோயாளர்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள வடக்கு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிறபகுதிகளிலிருந்தும் 10 நோயாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.

இன்று முதல் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளது.