ரஜினியின் வாழ்க்கை படமாகின்றது!

7

அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படமாக வந்துள்ளன. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை சினிமா படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது:-

“நான் இதுவரை வாழ்க்கை கதைகளை படமாக எடுக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு படத்துக்கு தேவையான அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் உள்ளன. அவரது தீவிர ரசிகன் நான், அவரது நடிப்பு, ஸ்டைல் அனைத்தும் பிடிக்கும். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளார். நல்ல குடும்ப பின்னணியை கொண்டவர்.

ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஆரம்பித்து எல்லா பக்தி மார்க்கங்களிலும் தொடர்பு உள்ளவர். அவரது வாழ்க்கையை படமாக்கினால் மக்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும். முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு அவரது வாழ்க்கை படம் முன்மாதிரியாகவும் இருக்கும். அவரது வாழ்க்கை கதையை திரையில் இளைஞர்கள் பார்க்கும்போது இன்னும் உழைக்க வேண்டும் என்ற வேகம் வரும். ரஜினியின் அனைத்து பேட்டிகளையும் நான் படித்து வருகிறேன். ரஜினி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் தனுசுக்கு நன்றாக வரும்.”

இவ்வாறு அவர் கூறினார். தனது வாழ்க்கையை படமாக்க ரஜினி ஒப்புதல் அளிப்பாரா என்று தெரியவில்லை.