இலங்கை தனக்குத்தானே சவக்கிடங்கை வெட்டுகிறது: சிறிதரன்!

248

பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது என்பது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கனகாம்பிகைக்குள கிராம மக்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் யாப்புக்கள் அனைத்தும் சிறுபான்மையின மக்களின் நலன்களைக் கருத்துக்களை கொள்ளாது சிங்கள மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களினதோ தமிழ் மக்களின் கருத்துக்கள் எதையும் கருத்தில் கொள்ளாது உருவாக்கப்பட்டன.

13 வது திருத்தச் சட்டம் என்பது இந்திய நாட்டினுடைய அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பாக இந்தியாவே கையொப்பமிட்டு இருந்தது.எமது பிராந்தியத்தினுடைய வல்லரசாக இருக்கும் இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என இப்போதும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்டமைந்த 19 வது திருத்தச் சட்டத்தை நீக்கி 20வது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது என்பது ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்காகவே ஆகும்.

மிலேனிய ஆண்டுகளை கடந்து வந்த இலங்கை தன்னை இந்த உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றியமைத்து தன்னை ஒரு பன்மைத்துவ தன்மையை ஏற்றுக்கொள்ளாத இலங்கை உலகப் பந்தில் தனக்குத் தானே சவக்கிடங்குகளை வெட்டத் தொடங்கி இருக்கிறது.