விஷச் சாராயத்துக்கு பலி 86 ஆக அதிகரிப்பு: 6 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

50

பஞ்சாப் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 86 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 போலீஸ் அதிகாரிகள், 7 கலால்வரி அதிகாரிகளை முதல்வர் அமரிந்தர் சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதில் 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளளனர்.

மாநிலத்தில் எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம், கொலைகார அரசு என்று முதல்வர் அமரிந்தர் சிங்கை கடுமையாக விமர்சித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தார்ன் தரண், அமிர்தஸர், குருதாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில்தான் இந்த விஷச் சாரயம் குடித்து உயிரிழப்பு நடந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் விற்கப்படும் கள்ளச்சாரயத்தை ஏராளமானோர் குடித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அமிர்தசர் மாவட்டத்தில் உள்ள முச்சால் கிராமத்தில் ஒருவர் விஷச்சாரயம் குடித்து முதன்முதலில் உயிரிழந்தார். ஆனால், அதன்பின் மற்ற இரு மாவட்டங்களான தார்ன் தரண், குருதாஸ்பூர் ஆகியவற்றில் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவுவரை விஷச்சாரயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக இருந்து. ஆனால் நேற்றுமேலும், 48 பேர் விஷச்சாரயத்துக்கு பலியாகியதால் பலி எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

இதில் தார்ன் தரண் மாவட்டத்தில் மட்டும் 63 பேரும், அமிர்தசர் மாவட்டத்தில் 12 பேரும், குருதாஸ்பூரில் 11 பேரும் உயிரிழந்தனர் என்று பஞ்சாப் அரசு சாரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷச்சாரயம் குடித்து இறந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை அதிகாரிகள் வெளியிட மறுக்கிறார்கள் என்றும், எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் கூற மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

விஷச்சாரயம் குடித்து 86 பேர் பலியானதையடுத்து 2 போலீஸ் டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளர்கள் என 6 அதிகாரிகளையும், கலால்வரி அதிகாரிகள் 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இந்த 3 மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு இடங்களில் இருந்த சாராய ஊறல்களும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயமும் போலீஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் டிஜிபி தினகர் குப்தா கூறுகையில் “ உயிரிழப்பு ஏற்பட்ட 3 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தனிப்படையினர் தேடுதல் நடத்தினர். இதில் ஏராளமான சாராய ஊறல்கள், சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த கள்ளச்சாரயம் பாட்டியாலாவில் உள்ள ஷம்பு, பனூர், ராஜ்பூரா ஆகிய கிராமங்களில் உள்ள தாபாக்களில்அதிகம் இருந்தன” எனத் தெரிவித்தார்

பஞ்சாப் மாநில எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில் “ காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் நடத்துவது கொலைகார ஆட்சி. 80-க்கும் மேற்பட்ட பஞ்சாப் மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவுடன்தான் இந்த கள்ளச்சாரயம் வியாபாரம் நடந்துள்ளது, இந்த உயிரிழப்பும் நடந்துள்ளது. இது கொலைகாரச் செயல்.

இதில் குற்றத்தில் தொடர்புடைய அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். முதல்வர் அமரிந்தர் சிங் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப்,ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.