கொரோனாவால் திணறும் அமெரிக்கா; நிமிடத்துக்கு ஒருவர் பலி!

11

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது. அங்கு நேற்று மாலை நிலவரப்படி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 38 ஆயிரத்து 288 ஆக இருந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 371 ஆக பதிவாகி இருந்தது.

கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் பலியில் தினமும் புதிய உச்சம் காணப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக சராசரியாக 1,400-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இது, நிமிடத்துக்கு ஒருவர் பலி என்ற அளவில் இருக்கிறது. நேற்றும்கூட புளோரிடாவில் மட்டுமே 257 பேர் பலியாகினர்.

இதற்கு மத்தியில் அங்கு நவம்பரில் கொரோனா இறப்பு அளவு 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து விடும் என்று ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்து மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.