18 செக்கன்களுக்கு ஒருவா் கொரோனாவால் பலியாகிறார்களா!

84

உலகம் முழுவதும் சராசரியாக ஒவ்வொரு 18 செக்கன்களுக்கு ஒருவா் என்ற ரீதியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்துக்கு 196 பேரும் நாளொன்றுக்கு சராசரியாக 4,700 பேரும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனா்.

ஜூன்முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான உயிரிழப்புகளை கணக்கிட்டால் இந்த சராசரியில் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவது உறுதி செய்யப்படுகிறது.

உலகில் கொரோனாவால் உயிரிழப்போரில் நான்கில் ஒருவர் அமெரிக்காவைச் சோ்ந்தவா்களாவா்.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 44,700 பேர் புதிதாக தொற்றுக்குள்ளானமை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் 2019 டிசெம்பா் முதல் சீனாவின் வுஹானில் அடையாளம் காணப்பட்டதாக உத்தியோகபூா்வமாக உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஜனவரி 9 ஆம் திகதி வுஹானில் பதிவானது.

இந்நிலையில் முதல் உயிரிழப்பு பதிவாகி 6 மாதங்களில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானவா்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு மாதத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம், எய்ட்ஸ், மலேரியா நோய்தொற்றுகளால் ஒரு மாதத்தில் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாக தரவுகள் உறுதி செய்கின்றன.