கச்சத்தீவை மீட்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் இணை அமைச்சர் வி.முரளிதரன் வெளியிட்டுள்ள தகவல்!

40

கச்சத்தீவை மீட்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறினார்.

திருச்சி இந்தி பிரச்சார சபா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது,

`ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கச்சத்தீவை மீட்பதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி கூறுபவர்கள், வரலாற்றை ஒருமுறை சரியாகப் படித்தால், உண்மையைத் தெரிந்து கொள்வார்கள்

சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள விவகாரத்தில், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக அரசின் பல்வேறு ஊழல்களை சுட்டிக்காட்டி பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இதனால், தமிழக மக்களிடையே பாஜகவுக்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என மத்திய அமைச்சர் கூறினார்.