கொழும்பில் மீண்டும் வெடித்த ஆர்ப்பாட்டம் மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

371

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஊர்வலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டீல் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்யுமாறு ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கொழும்புல் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வசந்த முதலிகே மற்றும் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணி மீது கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.