நாட்டுக்கு வந்த சீன கப்பலை மிகுந்த ஆவலாக வரவேற்ற சரத் வீரசேகர!

86

பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர சீன கப்பலை மிகுந்த ஆவலாக வரவேற்றுள்ளார்.

அதேவேளை சீன கப்பல் உளவு பார்ப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறதாக இந்தியா குற்றம் சுமத்திய போது அது அபத்தமானது என சரத் வீரசேகர கூறியிருந்தார்.

அதோடு யுவான் வோங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேவைகளுக்காக இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக் கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறிய சரத் வீரசேகர, சீனாவின் கப்பல் இந்தியாவை உளவு பார்ப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று இலங்கை வந்துள்ள சீன கப்பல் வரும் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.