கடும் மழையிலும் உணவு டெலிவரி செய்த மாற்றுத்திறனாளி! வடிக்கையாளரின் நெகிழ்ச்சி செயல்

21

கடும் மழையிலும் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவு டெலிவரி செய்தது தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவருக்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர்.

பெங்களூரில் வசித்து வருபவர் ரோகித் குமார் சிங். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை swiggy-யில் உணவு ஆர்டர் செய்தார். இந்த ஆர்டரை கிருஷ்ணப்பா ராதோடு (வயது 40) என்பவர் எடுத்து கொண்டார்.

30 நிமிடத்தில் உணவு ரோகித் குமார் சிங்கிற்கு கிடைக்க வேண்டும். இதற்கிடையே தான் பெங்களூரில் கனமழை கொட்டத் தொடங்கியது. அதே நேரத்தில் ரோகித் குமார் சிங்குக்கும் வயிற்றுப்பசி அதிகரித்ததோடு 30 நிமிடத்தை கடந்தது.

இதனால் அவர் கிருஷ்ணப்பா ராதோடுவுக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து 10 நிமிடத்தில் உணவு கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அதற்குள் அவர் உணவு கொண்டு செல்லவில்லை. மாறாக தாமதமாக உணவு கொண்டு சென்று கதவை ரோகித் குமார் சிங் வசிக்கும் வீட்டு கதவை தட்டினார்.

கோபத்தில் வெளியே வந்த ரோகித் குமார் சிங், டெலிவரி செய்த கிருஷ்ணப்பா ராதோடை திட்ட நினைத்தார்.

ஆனால் அவர் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். ஏனென்றால் கிருஷ்ணப்பா ராதோடு ஊன்றுகோல் உதவியுடன் சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தார்.

மாற்றுத்திறனாளியான அவரை பார்த்து ஷாக் ஆன ரோகித் குமார் சிங் தனது மனதை மாற்றி கொண்டார். இதையடுத்து அவரிடம் பேச்சு கொடுத்த ரோகித் குமார் சிங் சில விஷயங்களை கேட்டறிந்தார்.

அப்போது கிருஷ்ணப்பா ராதோடு தனது சூழ்நிலையை அவரிடம் எடுத்து கூறினார். அதாவது ‛‛தனக்கு 40 வயது ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். கொரோனா காலத்தில் வேலையிழந்த நிலையில் உணவு டெலிவரி செய்து வருகிறேன்.

இதில் ஓரளவு வரும் வருமானத்தால் தான் குடும்பம் உணவு சாப்பிடுகிறது. இருப்பினும் மழையிலும் வெயிலிலும் போக்குவரத்து நெரிசலிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

இது சிரமம் இருப்பினும் வேறு வழியில்லை” என கூறியுள்ளார். இதற்கிடையே தான் அவருக்கு இன்னொரு ஆர்டர் வந்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் கிருஷ்ணப்பா ராதோடுவின் கதையை கேட்ட ரோகித் குமார் சிங் அதுபற்றி லிங்க்ட்இன் எனும் சமூக வலைதள பக்கத்தில் முழுமையாக எழுதினார். தற்போது இந்த பதிவு அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஏராளமானோர் கிருஷ்ணப்பா ராதோடுவுக்கு நிதியுதவி செய்யவும், நிறுவனத்தில் வேலை வழங்கவும் முன்வந்துள்ளனர்.