பிரபலபாடசாலையில் கன்னத்தில் அறைந்த ஆசிரியரை பள்ளத்தில் தள்ளிவிட்ட மாணவன்!

1180

கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தரம் 13 இல் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் சம்பவ தினம் காலை தனது தலைமுடியை வளர்த்துக்கொண்டு வந்தார் என்று தெரியவருகின்றது. இதன்போது குறித்த ஆசிரியர் அது குறித்து மாணவனிடன் வினவியபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியர், மாணவனின் கன்னத்தில் அறைந்தார் எனவும், இதன்போது குறித்த மாணவன் ஆசிரியரை அருகேயிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டார் எனவும் தெரியவருகின்றது.

இதையடுத்து சக ஆசிரியர்கள் இணைந்து இருவரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் அறைந்ததால் மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை செய்வதற்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மேற்படி சம்பவம் தொடர்பாகக் கம்பளைப் பொலிஸாருக்குப் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.