தலைமன்னார் மணல் திட்டுகளில் இந்தியா செல்ல காத்திருந்தவர்கள் கைது!

57

தலைமன்னார் மணல் திட்டுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஊடாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த நபர்கள் படகு ஒன்று வரும் வரை மணல் திட்டு ஒன்றில் காத்திருந்த போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் 18 வயதுக்கும் குறைந்த 6 சிறார்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் கைது செய்துள்ள இந்த நபர்கள் வவுனியா, திருகோணமலை, மொரவெவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 600 பேர் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.