தாய் தன்னை தண்டித்ததால் கோபத்தில் விபரீத முடிவு எடுத்த பள்ளி மாணவி

694

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சுபாஷினி . இவர்களுக்கு தனிஷா என்று 13 வயதில் மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மாணவி தனிஷா சரிவர படிக்காமல் இருந்ததாக அவரது தாய் அறிவுரை கூறி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேர்வு மதிப்பெண் வெளியாகியுள்ளது. அதில், தனிஷா குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தார். இந்த சூழலில் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த தனிஷாவை தாய் சுபாஷினி மதிப்பெண் குறித்து திட்டியுள்ளார்.

இதனால், சோகமாக இருந்த தனிஷா கழிவறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ எரிந்த நிலையில் கதறி துடித்த தனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் சுபாஷினி மற்றும் உறவினர்கள் சேர்ந்து கதவை உடைத்து சென்று தனிஷாவை மீட்டனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே தனிஷா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் தனிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தாய் திட்டியதால் 8 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.