வவுனியாவில் வீதியில் டயர் போட்டு எரித்த இரு இளைஞர்கள் கைது!!

121

வவுனியா செட்டிகுளம்- நேரியகுளம் வீதியில் டயர் போட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (28.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோட்டபாய – மஹிந்த அரசாங்கத்தை பதவி விலகக் கோரி நாடு பூராகவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (28.04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையிலேயே வவுனியா, செட்டிகுளம் – நேரியகுளம் வீதியில் உள்ள வீரபுரம் பகுதியில் வீதியில் டயர் போட்டு எரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொது வீதிக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக வீரபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களது வாக்கு மூலங்களை பதிவு செய்த பின் எச்சரிக்கப்பட்டு அவர்களை விடுவித்தனர்.

இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் இளைஞர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.