நீண்ட காலமாகச் சொல்லொணா துக்கத்தையும் இன்னல்களையும் எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தேன் – நடிகை சமந்தா

20

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரில் இடம்பெற்ற ராஜி கதாபாத்திரம் சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்குச் சமர்ப்பணம் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் டி.கே. இயக்கியிருந்தார்கள்.

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2 வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2, அமேசான் பிரைம் ஓடிடியில் நேற்றிரவு வெளியானது.


ஐஎஸ்ஐ அமைப்புக்கும் போராளிகளுக்கும் இடையே எதிர்பாராத விதத்தில் கூட்டணி உருவாகியுள்ளது என்கிற ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து இலங்கைப் போரைத் தவறான விதத்தில் சித்தரித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் #FamilyMan2_against_Tamils என்கிற ஹாஷ்டேக்கின் வழியே பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

தி ஃபேமிலி மேன் 2 தொடரைத் தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார். ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தி ஃபேமிலி மேன் 2 தொடரின் டிரெய்லர் உள்ளது. இந்த இணையத்தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தைக் காப்பது கடினமாகும் என்பதால் தடை செய்ய வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தி ஃபேமிலி மேன் 2 ஓடிடியில் வெளியானதையடுத்து தனது கதாபாத்திரம் பற்றி இன்ஸ்டகிராமில் நடிகை சமந்தா கூறியதாவது:

ஃபேமிலி மேன் இணையத் தொடருக்கான விமர்சனங்களை படிக்கும்போது என் மனம் சந்தோஷத்தில் நிறைகிறது. இத்தொடருக்காக இயக்குநர்கள் என்னை அணுகியபோது அக்கதாபாத்திரத்தை உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஈழப் போரில் பெண்கள் குறித்த கதைகள் உள்பட தமிழர் போராட்டத்தின் ஆவணப் படங்களைப் படக்குழுவினர் எனக்குக் காண்பித்தார்கள். அவற்றைப் பார்த்தபோது, நீண்ட காலமாகச் சொல்லொணா துக்கத்தையும் இன்னல்களையும் எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தேன். ஆவணப்படங்களைச் சில ஆயிரம் பேர் தான் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். பல்லாயிரக்கணக்கான ஈழ மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தபோது உலகம் எப்படி விலகி நின்று பார்த்தது என்பது அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்துள்ளார்கள். எண்ணற்ற மக்கள் போரினால் உண்டான காயங்களை மனத்தில் சுமந்துகொண்டு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.

ராஜி கதாபாத்திரம் புனைவு என்றாலும் சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்கும் போரினால் உண்டான ஆறாத வடுக்களைச் சுமந்துகொண்டு வாழ்பவர்களுக்குமான சமர்ப்பணம். ராஜி கதாபாத்திரம் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடும் நுட்பமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன். ராஜியின் கதை ரத்தமும் சதையுமாக நமக்கு உணர்த்தும் உண்மை முன் எப்போதையும் விட இப்போது நமக்குத் தேவைப்படுகிறது. மனிதர்கள் ஒற்றுமையுடன் வெறுப்பு, அடக்குமுறை, பேராசை ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று விரும்பினேன். இதை நாம் செய்யத் தவறினால் எண்ணற்ற மக்களின் அடையாளம், விடுதலை, சுய நிர்ணய உரிமை போன்றவை மறுக்கப்படும் என்றார்.