கூட்டமைப்பு முக்கியஸ்தர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்த சம்பவம்!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கடலில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். தீவக படகு சேவையொன்றில் பயணித்த போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு துறையில் நேற்று இடம்பெற்றது. மாரடைப்பில் காலமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அனலைதீவு வட்டார பிரதேச சபை உறுப்பினரின் மரணச்சடங்கு நேற்று அனலைதீவில் இடம்பெற்றது.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் நேற்று காலை அனலைதீவுக்கு சென்றிருந்தனர்.

Advertisement

மரணச்சடங்கு என்பதால் பயணிப்பதற்கு தயாரான படகில் அளவுக்கு அதிகமான மக்கள் ஏறியதால் படகோட்டிகள் இன்னுமொரு படகையும் ஒழுங்குபடுத்தி அதில் ஒருதொகுதி மக்களை கடலில் வைத்து ஏற்றினார்கள்.

இதன்போது படகில் இருந்து படகிற்கு பயணிகள் இடம்மாறும் போது படகு காற்றினால் விலகி சென்றதால் குறித்த நேரத்தில் படகில் இருந்து மற்றைய படகுக்கு மாறிய கஜதீபன் தவறி கடலில் வீழ்ந்துள்ளார்.

எனினும் படகில் இருந்தவர்கள் உடனடியாக கயிற்றினை வீசி மீட்க உதவியுள்ளனர். விபத்து சம்பவத்தினால் கஜதீபன் சிறிய காயங்களுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியதோடு படகோட்டிகளின் கவனயீனம் தொடர்பிலும் விசனமடைந்தனர்.