யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கும் கொரோனா!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவர் உட்பட சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டிருந்தது.

குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, தாமே முன்வந்து பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்த நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், யாழ்.போதனா வைத்தியசாலையின் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்குச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நடைமுறைகளும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.