கிளிநொச்சியில் அடை மழைக்கு மத்தியிலும் காணாமல் போன உறவுகளுக்கு நீதி கோரி தீச்சட்டி போராட்டம்!

1

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீச்சட்டி பேரணி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி குறித்த பேரணி பயணிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை போராட்டகாரர்கள் எழுப்பி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கமைய இந்த பேரணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.