Saturday, April 20, 2024
Homeஅரசியல்செய்திவேகமெடுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..“உதயநிதியிடம் இந்த ரகசியத்த கேளுங்க” - ஈரோட்டில் இபிஎஸ் பரப்புரை...!

வேகமெடுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..“உதயநிதியிடம் இந்த ரகசியத்த கேளுங்க” – ஈரோட்டில் இபிஎஸ் பரப்புரை…!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் நகர் பகுதியில் திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். கருணாநிதியின் பேனா இல்லையென்றால் இன்று தமிழ்நாட்டில் சிலர் தலைவர் பதவிக்கு உயர்ந்திருக்க முடியாது என்று கூறினார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். 21 மாதங்களாக காத்து வரும் நீட் தேர்வு ரத்து ரகசியத்தை பிரசாரத்திற்கு வரும்போது அமைச்சர் உதயநிதியிடம் கேட்குமாறு பொதுமக்களிடம் கூறினார். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் அதிமுக கொள்கைகளில் எவரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா, கோட்டை முனிசிபல் காலனியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களிடம் கண்ணியமாக வாக்கு கேட்பதுதான் திமுகவினர் வேலை என்றும், மற்றவர்களை ‘இழித்து, பழித்து’ பேசுவது தாங்கள் அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சி இளைஞரணி செயலாளரும், விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் பரப்புரை மேற்கொண்டார். மற்ற கட்சி தலைவர்கள் போல் அல்லாமல், தனது சொந்த காசை மக்களுக்கு செலவு செய்வது விஜயகாந்த் என்று கூறினார்.

இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்கு பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள ஆயிரத்து 206 அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறை, விவிபேட் இயந்திரத்தை பரிசோதித்தல், பழுதை சரிசெய்தல் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், 24ம் தேதி அடுத்தக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்றும், இன்று தொடங்கி 3 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments