Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பரிதாப பலி!

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பரிதாப பலி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெரும்பகுதி பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டாலும், பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பாக, நமது ஜூனியர் விகடன் 19.10.2022 தேதியிட்டு இதழில், “மழைநீர் வடிகால்… அரைவேக்காட்டு திட்டம்! – சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்…” என்ற தலையில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருந்தோம்.

அதில், “பணிகள் நடக்கும் பெரும்பாலான இடங்கள், மழைக்காலத்தில் உயிர் வாங்கும் பலிபீடங்களாக மாற வாய்ப்புகள் அதிகம். வெள்ள அபாயத்திலிருந்து மக்களைக் காக்கிறீர்களோ இல்லையோ, வடிகால் கட்டுமானங்களிடமிருந்து மக்களை உடனே காப்பாற்றுங்கள்!” என்று குறிப்பிட்டிருந்தோம். இருந்தபோதிலும், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகாலுக்குத் தோண்டப்பட்ட பள்ளங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாது காணப்பட்டன.

இந்த நிலையில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் (25) என்பவர், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்திருக்கிறார். குழியிலிருந்த கம்பிகள் குத்தியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வழியாகச் சென்ற காவலர் ஒருவர், பொதுமக்களின் உதவியுடன் பள்ளத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

தொடர்ந்து இன்று காலை மேல்சிகிச்சைக்காக முத்துகிருஷ்ணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் விகடனில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் மாணவ நிருபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் ஒருவர் மழைநீர் வடிகால் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments