Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்தாய்லாந்தில் தரையிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ!

தாய்லாந்தில் தரையிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை (11-08-2022) சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி இன்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கான குறுகிய கால நுழைவு வீசா காலாவதியான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

இந்த நிலையில், இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி, கோட்டாபய ராஜபக்ஷ 90 நாட்கள் தாய்லாந்தின் தங்கியிருப்பார் எனவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தங்கியிருப்பது தமது நாட்டிற்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்று தாய்லாந்து அரசு நம்புவதாகவும், இந்த முடிவை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோட்டாபய தாய்லாந்தில் தங்கியிருப்பது தற்காலிகமானது என்றும், அவருக்கு தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும், நுழைவு விசைவு நிறைவடைந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ச வேறு நாட்டுக்கு செல்வார் எனவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments