Friday, March 29, 2024
Homeவானிலை செய்திதமிழ் நாட்டிலே மீண்டும் தொடரும் பருவ மழை…மற்றொரு புயலுக்கு வாய்ப்பு உள்ளதா !

தமிழ் நாட்டிலே மீண்டும் தொடரும் பருவ மழை…மற்றொரு புயலுக்கு வாய்ப்பு உள்ளதா !

மேண்டோஸ் புயல் தமிழ்நாட்டைக் கடந்து சென்றுவிட்ட போதிலும் தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவிலிருந்தே மழை நீடித்து வருகிறது. பல மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை நெருங்கிவந்த மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்தது.

அதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கடந்த சென்றதால், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவந்தது.

தற்போது மாண்டஸ் புயல் எச்சம் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமையன்று தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவிலிருந்து மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.

தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அங்கு பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மதியம் 3 மணியோடு வகுப்புகள் முடித்துக்கொள்ளப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல்பகுதியின் கிழக்குப் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, நாளை அந்தமான் கடலின் தெற்குப் பகுதியில் நிலவக்கூடும். தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் காலகட்டமான அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 401 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இந்த காலகட்டத்திற்கான இயல்பான அளவு. சென்னையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தற்கான இயல்பான அளவு 736 மி.மீ. ஆனால், தற்போது 856 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் அதிகம்.

மேண்டோஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, டிசம்பர் 9ஆம் தேதிவரை சென்னையில் இயல்பான மழையைவிட 1 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 9ஆம் தேதிக்கு முன்பு இயல்பைவிட 4 சதவீதம் அதிக மழை பெய்திருந்தது. தற்போது இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக உள்ளது. ராணிப்பேட்டையில் 19 சதவீதம் குறைவாக பதிவாகியிருந்த மழை, புயலுக்குப் பின்பு 10 சதவீதம் அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரிலும் திருவள்ளூரிலும் 9 செ.மி. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

லட்சத் தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments