Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்போம்….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பொங்கல் வாழ்த்து…

தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்போம்….முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பொங்கல் வாழ்த்து…

பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆளுநர் உரை விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை மேற்கொள்காட்டி, “ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சட்டப்பேரவையில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு என்றும் கூறிய முதலமைச்சர், “கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் நிறைய பொருட்கள் இருந்தன. தரமான முறையில் கவனத்துடன் வழங்கப்பட்டன. ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குறைகள் வெளிப்பட்டன. எதிர்க்கட்சிகள் அவற்றை பூதக்கண்ணாடி வைத்துப் பெருக்கி, அவல அரசியல் செய்ய நினைத்தபோதும், அதனையும்கூட அலட்சியப்படுத்தாமல், குறைகள் குறித்து விசாரித்தறிய குழு அமைக்கப்பட்டது. இந்த முறை அந்தக் குறையும் சிறிதும் கூட இருக்கக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டு ரொக்கத் தொகையுடன் தரமான பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் உழவர்கள் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முழுக் கரும்பு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்.ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு, சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள். தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments