Tuesday, March 19, 2024
Homeஇந்திய செய்திகள்கிலோ 2 ரூபாய்க்கு ஏலம் போன வெங்காயம்...அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டம்

கிலோ 2 ரூபாய்க்கு ஏலம் போன வெங்காயம்…அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டம்

இந்தியாவில் சீசனுக்கு ஏற்ப வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை கடும் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு மாறி மாறி விற்கப்படும். இந்த விலை மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடும் அவதியை தருவதாக நீண்ட கால புகார் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மண்டி எனப்படும் பெரிய சந்தைகளில் விவசாயிகளிடம் பொருள்களை கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு உரிய உள்ளீட்டு தொகை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வெங்காய ஏலத்தில் மிக சொற்ப விலையில் வெங்காயம் விலை போனது விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தையானது மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ளது.

இங்குள்ள லசல்காவ் ஏபிஎம்சி சந்தையில், நடைபெற்ற வெங்காய ஏலத்தில் கிலோ வெங்காயம் ரூ.2 முதல் ரூ.4க்கு தான் விலை போனது. மிக சொற்ப விலைக்கு வெங்காயம் ஏலம் போனது விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சோலாப்பூரை சேர்ந்த விவசாயியான ராஜேந்திர சவான், ஏபிஎம்சி சந்தையில் 512 கிலோ வெங்காயத்தை விற்க வந்தார். அப்போது அவரது வெங்காயம் கிலோ ரூ.1க்கு தான் விலை போகியுள்ளது. இவரது உள்ளீட்டு செலவு, போக்குவரத்து கட்டணம், சுமை கூலி, கமிஷன், கழிவுகள் போன்ற செலவுகள் போக அவருக்கு லாப தொகையாக இரண்டு ரூபாய் மட்டுமே மிஞ்சியுள்ளது.

இந்த ரசீதை அவர் புகைபடம் எடுத்து பகிர்ந்த நிலையில், இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெங்காய விலை இப்படி அடிமாட்டு விலைக்கு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிரா வெங்காய உற்பத்தியாளர் சங்க விவசாயிகள் ஏலத்தை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

கிலோ வெங்காயம் தற்போது இரண்டு, மூன்று ரூபாய்க்கு விற்பனை ஆகிறது எனவும், குறைந்தது கிலோ வெங்காயத்தை ரூ.15இல் ரூ.20க்கு ஏலம் எடுக்க வேண்டும் என போராட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை என்றால் ஏலத்தை நடத்த விட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments