Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாகாணத்தில் நிலம், வீடமைப்பு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, வடமாகாண உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளம் பகுதியில் 1994ஆம் ஆண்டு குடியேறிய தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வு காணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீடமைப்புப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும் அதற்கு சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாடளாவிய ரீதியில் பல வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன், இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments