Saturday, April 20, 2024
Homeவிளையாட்டுஓஷாதி, ஹர்ஷிதா, நிலக்ஷி ஆகியோர் அபாரம்; இலங்கைக்கு 2ஆவது நேரடி வெற்றி...

ஓஷாதி, ஹர்ஷிதா, நிலக்ஷி ஆகியோர் அபாரம்; இலங்கைக்கு 2ஆவது நேரடி வெற்றி…

பங்களாதேஷுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியில் ஓஷாதி ரணசிங்க, சமரி அத்தபத்து ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகளும்    ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷ டி சில்வா ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்களும் பிரதான பங்காற்றின.

இதன் மூலம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 1ஆம் குழுவில் இடம்பெறும் இலங்கை தனது 2 நேரடி வெற்றியை ஈட்டி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

ஆரம்ப வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம, மத்திய வரிசை வீராங்கனை நிலஷ்டி சில்வா ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இலங்கை அணி ஆரம்பத்தில் சரிவு கண்டது. அணித் தலைவி சமரி அத்தபத்து (15), விஷ்மி குணரட்ன (1),

அனுஷ்கா சஞ்சீவனி (0) ஆகியோரது விக்கெட்களை மருபா அக்தர் வீழ்த்த 6ஆவது ஓவரில் இலங்கை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (25 – 3 விக்.)

ஆனால், ஹர்ஷிதா சமரவிக்ரமவும் நிலக்ஷி டி சில்வாவும் மிகவும் திறமையாகவும் அதேவேளை புத்திசாதுரியமாகவும் துடுப்பெடுத்தாடி இலங்கை வெற்றி பெறுவதை உறுதிசெய்தனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரம 50 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடனும் நிலக்ஷி டி சில்வா 38 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மருபா அக்தர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது ஓவரில் மர்ஷிதா காத்துன் (0) ஆட்டமிழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 8 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மற்றைய ஆரம்ப வீராங்கனை ஷமிமா சுல்தானா (20), சோபனா மோஸ்தரி (29),

அணித் தலைவி நிகார் சுல்தானா (28) ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை பலப்படுத்தினர். (9.5 ஓவர்களில் 71 – 3 விக்.)

ஆனால், ஓஷாதி ரணசிங்க, சமரி அத்தப்பத்து, இனோக்கா ரணவீர ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி பங்களாதேஷை ஆட்டம் காணச் செய்தனர்.

ஒஷாதி ரணசிங்க 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments