Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்அன்புஜோதி ஆசிரம விவகாரம் …தப்பிச் சென்ற பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

அன்புஜோதி ஆசிரம விவகாரம் …தப்பிச் சென்ற பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து கொடுமை தாங்க முடியாமல் இருமுறை தப்பித்து சென்ற பெண் ஒருவர், அங்கு தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நடைபெற்றது என அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். அங்கு, திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது அம்பலமானது. இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அறைகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச் செயல்கள் விசாரணையில் தெரியவந்தன. மேலும் ஆசிரமத்திலிருந்து இதுவரை 16 பேர் காணாமல் போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்ரமத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி ஆசிரமம் நடத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமவாசிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரம பணியாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண்மணி ஒருவர் பகீர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கொடுமை தாங்க முடியாமல் 4 ஆண்டுகளில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்தேன். வயதானவர்களை அடித்து பணம் மற்றும் நகைகளை நிர்வாகிகள் பறித்துக்கொண்டார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 பெண்களும் என்னிடம் கதறி அழுதுள்ளனர். புதிதாக வரும் இளம்பெண்களை இது போன்று செய்துள்ளனர். எதற்கெடுதாலும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள், அடிப்பார்கள், சங்கிலியால் கட்டி வைப்பார்கள்” என அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார்.

ஏற்கனவே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியந்துள்ளது. மேலும் சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடமும் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments