Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்அடுத்த சுதந்திரதினத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: நாடாளுமன்றத்தில் ரணில் !

அடுத்த சுதந்திரதினத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு: நாடாளுமன்றத்தில் ரணில் !

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் யாரும் தலையிட விரும்பவில்லை எனவும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்லும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே கைதிகள் தொடர்பில் ,அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது சிறையில் உள்ள எழுத்தாளார் தொடர்பில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவரின் விடுதலை அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல் போனோர் விடயங்களையும் ஆராய்கின்றோம். அடுத்த வாரம் இது பற்றி தமிழ் தரப்புடன் கலந்துரையாடவுள்ளோம். அதற்கு தமிழர் தரப்பு பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) பரிந்துரைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“நேரடி வரிகளை அதிகரிப்பதா அல்லது மறைமுக வரிகளை அதிகரிப்பதா, மற்றும் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதா என்பதை பட்ஜெட்டில் கவனம் செலுத்துவோம். இது பட்ஜெட்டின் கட்டமைப்பாக இருக்கும், மேலும் இது சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த பொருளாதார இலக்குகளையும் பிரதிபலிக்கும்,” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கிய வேலைத்திட்டம் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சபையில் சமர்ப்பிக்கப்படுமா என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அடுத்த கட்ட கலந்துரையாடலின் பின்னர் அது சமர்ப்பிக்கப்படும் என்றார். “கடனாளிகளுடன் நாங்கள் முத்தரப்பு உடன்படிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால், இது நீண்ட காலம் ஆகாது,” என்று அவர் கூறினார்.

கடனாளிகளுடனான கலந்துரையாடலின் அடிப்படையானது கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுமா என்பதுதான்,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலமைப்பு பேரவையின் நியமனத்தை துரிதப்படுத்துமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். “அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சிவில் உறுப்பினர்களின் பெயர்களை பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மூன்று பெயர்களின் விஷயம் மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளாது. அரசியலமைப்பு பேரவை இறுதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான சட்டங்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments